சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக… ராகுல் பொளேர் பதிலடி

மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக: ராகுல் பதிலடி- வீடியோ டெல்லி: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க செய்துவிட்டோம் என பெருமை பேசும் பாஜகதான் இந்திய சிறையில் இருந்து அவரை விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். மசூத் அசாரை ஐ.நா. சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. தமது அரசின் முயற்சியால் தான் இந்த வெற்றி கிடைத்தது என பிரதமர் மோடி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பயங்கரவாதிகள் முன் மண்டியிட்டு மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததும் பாஜக அரசுதான் என்பதை மறந்துவிட முடியாது. மசூத் அசாரை காங்கிரஸ் அரசு விடுதலை செய்யவில்லை. பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக தவறாக பேசினேன். அதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனால் தம்மை காவலாளி என கூறும் பிரதமர் மோடி திருடன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எங்களது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை நாடு எதிர்நோக்கியுள்ள வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வை முன்வைத்திருக்கும் மிகப் பெரும் ஆவணம். நமது ராணுவத்தை பாஜக அவமானப்படுத்துகிறது. நமது ராணுவத்தினர் ஒன்றும் பாஜகவின் சொத்து அல்ல. சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது நமது ராணுவத்தினர்தானே தவிர பாஜக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி நாசப்படுத்திவிட்டார் இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP