பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் மாணவிகள் 96.5%, மாணவர்கள் 93.3% என மொத்தம் 95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 3.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 7,276 மேல்நிலைப் பள்ளிகளில் 2,634 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம் 
அரசுப்பள்ளிகள்: 90.6%
அரசு உதவி பெறும் பள்ளிகள்: 96.9%
மெட்ரிக் பள்ளிகள்: 99.1%
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்: 95.1%
பெண்கள் பள்ளிகள்: 96.8%
ஆண்கள் பள்ளிகள்: 90.2%

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் 
ஈரோடு: 98%
திருப்பூர்: 97.9%
கோவை: 97.6%

கடைசி 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள் 
வேலூர்: 89.29%
கடலூர்: 89.76%
கிருஷ்ணகிரி: 90.93%

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7,218 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ, மாணவியர்  தேர்வு எழுதியுள்ளனர். தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 32 பேர் எழுதினர். மொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வை எழுதியுள்ளனர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோரில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 693 பேர் மாணவியர். 3 லட்சத்து 74 ஆயிரத்து 925 பேர் மாணவர்கள்.  மாணவர்களை விட 66 ஆயிரத்து 768 மாணவியர் கூடுதலாக இந்த ஆண்டு எழுதியுள்ளனர்.

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி முடிந்தது. இதையடுத்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியுள்ள  மாணவ, மாணவியர் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

அந்தந்த மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தாங்கள் அளித்த செல்போன் எண்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் தற்காலிக மதிப்பெண் வழங்கப்படும். அச்சிட்ட மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் வரை இந்த தற்காலிக சான்றுகள் செல்லும். இந்த சான்றுகள் 14ம் தேதி பிற்பகல் முதல் பள்ளிகள், தேர்வு  மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். 16ம் தேதி பிற்பகலுக்கு பிறகு மாணவர்களே www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே செல்லும்.

மறுகூட்டல்
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 10ம் தேதி பிற்பகல் முதல் 11 மற்றும்  13ம் தேதி ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275, மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205, கட்டணம் செலுத்த  வேண்டும்.

இதற்கு  பிறகு தேர்வுத்துறை அறிவிக்கும் நாட்களில் மாணவர்களே தங்கள் விடைத்தாள் நகல்களை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். துணைத் தேர்வுபிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்கு ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை  சிறப்பு துணைத் தேர்வு  நடக்கும். இந்த துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள்  குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP